உணவு பதப்படுத்தும் துறையில் தமிழகத்தில் உன்னதமான வாய்ப்புகள்!
உணவு பதப்படுத்தும் துறையில் தமிழகத்தில் உன்னதமான வாய்ப்புகள்!
G V மணிமாறன்
முன்னாள் வங்கியாளர்
சென்னை 06 டிசம்பர் 2021
விவசாயம், கால்நடை, மீன் வளர்ப்பு போன்ற துறைகளின் விளை பொருட்களை உண்ணுகின்ற பதத்திற்கு மாற்றி பக்குவப்படுத்துவதே உணவு பதப்படுத்தும் தொழிலாகும்.
தானியங்களை வீட்டு உபயோகத்திற்கு மாவாக அரைத்து தருவது முதல் உயரிய தொழில் நுட்ப முறைகளை பயன்படுத்தி, சேர்க்கை மற்றும் பக்குவப் பாதுகாப்பு பொருட்களை சேர்த்து, உணவுப் பொருட்களை உண்ணும் பதத்திற்கு, பல நாள் கெடாமல் பாதுகாத்து வைக்கும் வண்ணம் ஆக்குவதும் உணவு பதப்படுத்தும் தொழிலின் உயரிய அம்சங்களாகும்.
இத்தகைய பதப்படுத்தும் தொழில் நுட்பங்கள், உணவு வீணாவதை தடுப்பதுடன், சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் உணவு பாதுகாப்பு ஆகியவற்றில் அளப்பரிய பங்காற்றுகின்றன.
முன்னுரை:
தமிழ்நாட்டின் விவசாயத் துறை பொருளாதாரத்தில் 12% பங்கினை அளித்து, 40% மக்களுக்கு வேலைவாய்ப்பு நல்குகிறது. மாம்பழம், வாழைப்பழம், மஞ்சள், பப்பாளி, அரிசி, சோளம், கரும்பு, தேங்காய், கடலை, முந்திரி, பீன்ஸ், திராட்சை ஆகியவற்றின் உற்பத்தியில் இந்தியாவில் முன்னணி மாநிலம் தமிழ்நாடாகும்.
தமிழகம், மரவள்ளி, புளி உற்பத்தியில் இந்தியாவிலேயே முதலிடமும்; கோழி, முட்டை ஆகியவற்றில் இரண்டாமிடமும்; தேயிலை, காப்பி உற்பத்தியில் மூன்றாமிடமும்; கடல் மீன் உற்பத்தியில் நான்காமிடமும் பெற்றுள்ளது.
தமிழகத்தில் முக்கிய உணவு பயிர்களாவன...
நெல், சோளம், சிறு தானியம், கம்பு, மரவள்ளி, கொள்ளு, பயறு, உளுந்து, துவரை ஆகும்;
முக்கிய பணப்பயிர்கள் ... கடலை, எள், கரும்பு ஆகும்;
தேங்காய், பனை முக்கிய தோட்டக்கலை பயிர்களாகும்.
தோட்டக்கலை பயிர்களை, ஆறு வகைப்படுத்தலாம். அவையாவன...
பழங்கள்
காய்கறிகள்
நறுமணப் பொருட்கள் மற்றும் சுவையூட்டிகள்
மலைப் பயிர்கள்
மலர்கள்
மூலிகை மற்றும் நறுமணப் பயிர்கள்
விவசாய விளைபொருட்கள்:
1. வாழை, மாம்பழம், எலுமிச்சை, திராட்சை, கொய்யா, சப்போட்டா, பப்பாளி, அன்னாசி ஆகியவை முக்கிய பழப்பயிர்களாகும். ஏறத்தாழ 2,93,146 ஹெக்டர் நிலங்களில், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருநெல்வேலி, வேலூர், தேனி, ஈரோடு, திருச்சி, திருவள்ளூர், தர்மபுரி, மதுரை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இவை பயிரிடப்படுகின்றன.
2. மரவள்ளி, வெங்காயம், தக்காளி, உருளை, கத்திரி, வெண்டை, முருங்கை, பீன்ஸ், காரட்,ஆகியவை முக்கிய காய்கறிகளாகும். இவை சுமார் 2,26,502 ஹெக்டர் நிலங்களில், நாமக்கல், சேலம், தருமபுரி, திருச்சி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, விழுப்புரம், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், நீலகிரி, தேனி மாவட்டங்களில் பயிரிடப்படுகின்றன.
3. முக்கிய நறுமண மற்றும் சுவையூட்டிகளாக, மிளகாய், மஞ்சள், புளி, கொத்தமல்லி, மிளகு, ஏலக்காய், கிராம்பு ஆகியவை, 1,45,559 ஹெக்டர் நிலங்களில், ராமநாதபுரம், தூத்துக்குடி, ஈரோடு, சேலம், விருதுநகர், திண்டுக்கல், தருமபுரி, சிவகங்கை, போடி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்படுகின்றன.
4. தேயிலை, காப்பி, ரப்பர், முந்திரி ஆகியவை மலை மற்றும் தோட்டப் பயிர்களாக, சுமார் 2,32,988 ஹெக்டர் நிலங்களில், நீலகிரி, அரியலூர், கடலூர், கன்னியாகுமரி, திண்டுக்கல், கோவை, புதுக்கோட்டை மற்றும் சேலம் மாவட்டங்களில் பயிரிடப்படுகின்றன.
கால்நடைத் துறை::
1. 2019 கால்நடை கணக்கெடுப்பின் படி, இந்தியாவில்
19.34 கோடி பசு மற்ற கால்நடைகளும்;
10.99 கோடி எருமைகளும் ;
7.43 கோடி செம்மறியாடுகளும்;
14.89 கோடி மற்ற ஆடுகளும்;
90 லட்சம் பன்றிகளும்; 2.51 லட்சம் ஒட்டகங்களும்; 3.42 லட்சம் குதிரைகளும்;
85.88 கோடி கோழியினங்களும் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
2. இதில், தமிழகத்தில், 4.56% கால்நடைகள் உள்ளன. இந்தியாவின் பால் உற்பத்தியில் 4.39%மும்; 7.88% இறைச்சி உற்பத்தியிலும் தமிழகம் பங்களித்துள்ளது.
3. ஆந்திர பிரதேசத்துக்கு அடுத்தபடியாக (18.67%), தமிழகம் இந்திய முட்டை உற்பத்தியில் 18.29% பங்களித்துள்ளது. கால்நடை துறையின் மொத்த மதிப்பீட்டில், தமிழகத்தின் பங்கு 5.29% ஆகும்.
4. தமிழகத்தின் பொருளாதார மொத்த மதிப்பு கூட்டுக்கணக்கில், கால்நடைத் துறை, 5.47% பங்களித்துள்ளது. மேலும், விவசாயம் மற்றும் சார்ந்த துறைகளில், இத்துறையின் பங்கு 45.62% ஆகும். 2011-12 ஆண்டில், கால்நடை துறையின் மதிப்பு கூட்டு கணக்கெடுப்பின் படி, ரூபாய்.26,179.44 கோடியாக இருந்த கால்நடைகளின் மதிப்பு, 2018-19ஆம் ஆண்டு, ரூபாய் 78,744.09 கோடியாக (தற்போதைய விலைகள் படி) உயர்ந்துள்ளது.
5. தமிழகத்தில், 2005-06 ஆம் ஆண்டு 54.74 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்த பால் உற்பத்தி, 2018-19ஆம் ஆண்டு 83.62 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது.
6. 2005-06 ஆம் ஆண்டு 62,225 லட்சம் எண்ணிக்கையிலான முட்டை உற்பத்தி, 2018-19ஆம் ஆண்டு 1,88,422 லட்சம் எண்ணிக்கையாக உயர்ந்துள்ளது.
7. மேலும், 2005-06 ஆம் ஆண்டு 1,18,616 மெட்ரிக் டன்னாக இருந்த இறைச்சி (கோழி இறைச்சி உட்பட) உற்பத்தி, 2018-19ஆம் ஆண்டு 6,33,802 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள்...
ஆண்டுக்கு 1 கோடி மெட்ரிக் டன்னுக்கு மேல் உணவு தானியம் உற்பத்தி செய்யும் தமிழ்நாட்டில், சுமார் 24,000 சிறு குறு உணவு பதப்படுத்தும் தொழிலகங்களும்; சுமார் 110 நடுத்தர மற்றும் பெரிய உணவு பதப்படுத்தும் ஆலைகளும் இயங்கி வருகின்றன. இந்தியாவிலேயே இரண்டாம் இடத்தை பிடித்துள்ள தமிழகம், இந்தியாவின் உணவு பதப்படுத்தும் துறையின் உற்பத்தியில் சுமார் 8% பங்களிப்பை தந்துள்ளது.
உணவு பதப்படுத்தும் துறை சார்ந்த தொழில்கள்
பழங்கள், காய்கறிகள்
நறுமணப்பொருட்கள்
இறைச்சி மற்றும் முட்டை
பால், பால் பொருட்கள்
மதுபான வகைகள்
மீன் துறை
மலைப் பயிர்கள்
தானியம் பதப்படுத்துதல்
இனிப்புகள், சாக்கலேட்டுகள், கோகோ பொருட்கள், சோயா பொருட்கள்
செறிவூட்டப்பட்ட குடிநீர்
உயர் புரத உணவுகள்
போன்ற பல்வேறு துறைகளையும் பொருள் வகைகளையும் தன்னுள் கொண்டுள்ளது.
உணவு மற்றும் விவசாய உலக நிறுவனத்தின் கூற்றுப்படி, உணவுப் பதப்படுத்துதல் மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது...
1. முதல் நிலை பதப்படுத்துதல்.....பழங்கள் மற்றும் காய்கறிகளை அடிப்படையாக சுத்தம் செய்து, ரகம் பிரித்து, பொதியிடுதல்
2. இரண்டாம் நிலை பதப்படுத்துதல்....நெல்லிலிருந்து அரிசி எடுத்தல் போன்று, அடிப்படை விளைபொருளை உணவு தயாரிப்பதற்கு முந்தைய நிலைக்கு பதப்படுத்துதல்
3. மூன்றாம் நிலை பதப்படுத்துதல்....வெதுப்பக உணவுகள், உடனடி உணவுகள், உடல்நல பானங்கள் போன்ற உடனடியாக உண்ணும் நிலைக்கு உயர் மதிப்புக்கூட்டு பதப்படுத்துதல்.
உணவு பதப்படுத்துதல் ...எதற்காக?
1. பாரம்பரிய உணவு பதப்படுத்துதல் முறைகள், உணவினை எளிதாக செரிமானம் அடைய செய்வதற்காகவும், விளைச்சல் இல்லாத காலங்களில் தொடர்ந்து உணவுப் பொருட்கள் கிடைக்கும் வண்ணமும் உருவாக்கப்பட்டன. பதப்படுத்துதல் மூலம், முதியவர்கள், கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள், சிறார்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோரின் ஊட்டச்சத்து தேவைகளை உடனடியாக நிறைவேற்ற இயலுகிறது.
2. நவீன உணவு பதப்படுத்துதல் மூன்று முக்கிய நோக்கங்களை உள்ளடக்கியது...
அ. நுண்ணுயிரியல் முறையிலும், வேதியியல் முறையிலும் உணவினை பாதுகாப்பது.
ஆ. நிறம், குணம், சுவை ஆகியவற்றில் சிறந்த வண்ணம் உணவுப் பொருட்களை அளிப்பது .
இ. உணவினை வசதியாகவும் சுகாதாரமாகவும் உண்ணும் வண்ணம் அளித்தல்.
உணவு பதப்படுத்துதல் முறைகள்...
விவசாய விளைபொருட்களை, உண்பதற்கேற்ற வண்ணம் பக்குவப்படுத்துவது மற்றும் ஒரு வகை உணவினை மற்றொரு வகை உணவாக மாற்றுவது ஆகியவை, உணவு பதப்படுத்துதல் முறைகளில் அடங்கும். இறுதியாக உருவாகும் உணவுப்பொருளின் அடிப்படையில், இந்திய உணவு பதப்படுத்தல் அமைச்சகம், மேற்படி பதப்படுத்தும் தொழிலகங்களை இரு வகையாகப் பிரித்துள்ளது...
1. உற்பத்தி பதப்படுத்தும் வழிமுறைகள்....
இம்முறையில், மூல விளைபொருளின் இயற்பியல் குணங்கள் மாற்றப்பட்டு, வர்த்தக விலை மதிப்புள்ள, உண்பதற்கேற்ற உணவுப்பொருளாக, மனித, இயந்திர, பொருளாதார சக்திகளின் மூலம் மாற்றப்படுதல்.
2. மற்ற மதிப்புக்கூட்டு பதப்படுத்தும் வழிமுறைகள்....
இம்முறையில் தயாரிப்பு வழிமுறைகளின்றி, விளைபொருளின் மதிப்பு கூட்டப்பட்டு, கெடாத்தன்மை காலம் அதிகரிக்கப்பட்டு, உண்ண உகந்ததாக மாற்றப்படுகிறது. மதிப்பு கூட்டு முறை, அளவுகளுக்கேற்ப, இது முதன்மை பதப்படுத்துதல், இரண்டாம் நிலை பதப்படுத்துதல் என்று வகைப்படுத்தப்படுகிறது.
முதன்மை பதப்படுத்துதல் என்பது அடிப்படை விளைபொருளை உண்பதற்கேற்றதாக மாற்றியமைப்பது...உலர்த்துதல், சுத்தப்படுத்துதல், தரம் பிரித்தல், பொதியிடுதல் ஆகியவை இதில் அடங்கும்.
இரண்டாம் நிலை பதப்படுத்துதல் முறையில், ரொட்டி, மது பானங்கள், உடனடி உணவுகள் ஆகியவை அடங்கும்.
மிகப்பெரிய அளவிலான உடனடியாக உண்ணும் உணவுப்பொருள்களை அதிக அளவில் வர்த்தக ரீதியாக தயாரித்தல் என்பது மூன்றாம் நிலை பதப்படுத்துதல் பிரிவில் அடங்கும்.
உணவு பதப்படுத்தல் துறை முதலீடுகள்....
1. பழங்கள் மற்றும் காய்கறிகள்...சுவையூட்டப்பட்ட, பக்குவப்படுத்தப்பட்ட,உறைய வைக்கப்பட்ட பழங்கள், காய்கறிகள், பழச்சாறுகள், பழக்கூழ்கள், பழக்கஞ்சிகள், பழப்பொடிகள், ஈரப்பதம் நீக்கப்பட்ட பழங்கள், காய்கறிகள், அவற்றின் துருவல்கள், உடனடி உணவுக்கறிகள் .
2. நொதித்தல் முறையில் பதப்படுத்தப்படும் உணவுகள்... பழரச மது வகைகள், பீர், வினிகர், ஈஸ்ட் தயாரிப்புகள், மதுபானங்கள், தானிய வகை மற்றும் பழ வகை பானங்கள்..
3. பால் ...திரவ நிலையிலான பால், தயிர், சுவையூட்டப்பட்ட தயிர், பாலாடைக்கட்டி, குடிசைத்தொழில் பாலாடைக்கட்டி, சுவிஸ் முறை பாலாடைக்கட்டி, நீல பாலடைக்கட்டிகள், பனிக்குழைவு, பால் இனிப்புகள்.
4. உணவு சேர்க்கைகள், உயிர்ச்சத்து மூலங்கள்
5. இனிப்பகம் மற்றும் வெதுப்பகம்...பிஸ்கெட்டுகள், ரொட்டி, கேக்குகள், உறைந்த இனிப்பு வடைகள்
6. இறைச்சி மற்றும் முட்டை...முட்டைகள், முட்டை பொடி, இறைச்சி துண்டுகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் மதிப்பு கூட்டு பொருட்கள், மீன், கடல் உணவுகள், மீன் பதப்படுத்துதல், பதப்படுத்திடும் மற்றும் உறைய வைக்கும் தொழிலகங்கள்..
7. தானிய பதனிடுதல்...எண்ணெய் பிழியும் துறை, அரிசி, பருப்பு ஆலைகள், மாவு ஆலைகள்.
8. உணவு பதனிட்டு பாதுகாத்தல் மற்றும் பொதியிடுதல்...உலோக டப்பிகள், மற்ற பொதியிடும் குப்பிகள் ..
9. உணவு பதனிடும் இயந்திரங்கள்...டப்பியில் அடைத்தல், பால் மற்றும் உணவு பதனிடுதல், சிறப்பு பதனிடு முறைகள், பொதியிடுதல், உறைந்த உணவு குளிரூட்டுதல் மற்றும் தக்க வெப்ப நிலையில் காத்தல்..
10. நுகர்வோர் உணவுகள்...பொதியிடப்பட்ட உணவுகள், அடைக்கப்பட்ட மென்பானங்கள், அடைக்கப்பட்ட குடிநீர், நறுமண பொருள் கூழ்கள் ..
11. வழங்கு திறன் உள்கட்டமைப்புகள்...குளிரூட்டு நிலையங்கள், உயர் தொழில் நுட்ப இறைச்சி கூடங்கள், உணவு பூங்காக்கள்...
12. உணவுப்பூங்காக்கள் அமைத்தல் என்பது அந்நிய முதலீட்டாளர்களுக்கு இந்திய உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட ஒரு வித்தியாசமான வாய்ப்பு...
13. " ஒரு மாவட்டத்திற்கு ஒரு முக்கிய பொருள் " என்ற இந்திய அரசின் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 728 மாவட்டங்களில் விவசாய மற்றும் அது சார்ந்த பொருட்கள் மூலமாக கொண்டு முதலீடு செய்யும் வாய்ப்பு...
உணவு பதப்படுத்தும் துறையில் முன்னேற்ற வாய்ப்புகளுக்கான முக்கிய காரணிகள்....
1. 65%க்கும் அதிகமான முப்பது வயதிற்குட்பட்ட இந்தியாவின் இளைய தலைமுறை
2. நுகர்வுத்தன்மையில் ஏற்படும் விரைவான மாற்றங்கள்
3. மக்களின் வருமானப் பெருக்கம்
4. வேலைக்கு செல்லும் மகளிரின் எண்ணிக்கையில் மிகுந்த உயர்வு மற்றும் அவர்களின் உடனடி உணவு விருப்பங்கள்
5. இந்தியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட உணவு சில்லரைத்துறையின் அபரிமித வளர்ச்சி
6. உணவிற்கும் மளிகைக்கும் இந்திய கிராமப்புறங்களில் 55% வருமானமும், நகரங்களில் 40%மும் செலவிடப்படும் நிலையில், இந்தியாவின் விளைச்சலில் 10% மட்டுமே பதப்படுத்தப்படுகிறது.
தமிழக அரசின் உணவுப் பதப்படுத்தும் தொழில் கொள்கைகள்.....
1. அறுவடைக்கு முன்பும் பின்பும் பயன்படுத்தும் தொழில் நுட்பங்களை கூட்டுறவு குழுக்களின் மூலம், புதுமையான உத்திகளை கையாள்வதை ஊக்குவித்தல்..
2. பயிர் சுழற்சி முறைகளை புகுத்தி, உயர் வேளாண்மை தொழில் நுட்பத்தின் மூலம் பதப்படுத்தும் தொழிலுக்கேற்ற வகையில் தரமான விளை பொருட்களை உற்பத்தி செய்தல்..
3. உணவு பதனிடும் தொழில்கள் துவங்கும் வண்ணம் உள்கட்டமைப்பு வசதிகளை விரைவாக விரிவாக்கம் செய்தல்
4. உணவு பதனிடும் தொழில் வளர்ச்சிக்கு இடையூறான சட்ட சிக்கல்களை நீக்கி, ஏதுவான சூழ்நிலையை உருவாக்குதல்.
5. இத்தொழிலுக்கு தேவைப்படும் அதிக ஆரம்ப முதலீடுகள், அதிக ஆபத்து குறியீடுகளை கருத்தில் கொண்டு, முதலீட்டாளர்களுக்கு தேவையான நிதி ஆதாரங்களை எளிமைப்படுத்தி அளித்தல்
6. முதலீட்டாளர்கள், வாங்குவோர், விற்போர், ஆகிய அனைவரும் பயனுறும் வண்ணம் நம்பிக்கைக்குகந்த செய்திகள், புள்ளி விபரங்களை அளிக்கும் வண்ணம் உள்கட்டமைப்புகளை உருவாக்குதல்
7. விவசாயம், தோட்டக்கலை, மலர்வளர்ப்பு, மீன் வளர்ப்பு, கால்நடைத் துறை ஆகிய அனைத்து துறைகளும் பதப்படுத்தும் துறையுடன் இணைந்து பணியாற்றும் வண்ணம் ஒருங்கிணைந்த, ஒருமுகமான முறையில் அரசின் நடவடிக்கைகளை அமைத்தல்.
8. பதனிடும் தரம் உயரும் வண்ணம் உயர் தொழில் நுட்ப முறையில் சுத்தப்படுத்தல், தரம் பிரித்தல், பொதியிடுதல் ஆகியவற்றிற்கு வித்திடல், காய்கறி, பழங்கள், கோழி, பால் மற்றும் பால் பொருட்கள், மீன், கடல் உணவுகள் போன்ற விரைவில் கெடும் பொருட்கள் சேமிப்பிற்கு ஒருங்கிணைந்த குளிரூட்டும் வளாகங்கள் மற்றும் நிலையங்கள் அமைத்தல் போன்ற மேம்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல்.
உணவு பதனிடும் துறைக்கான மத்திய அரசின் முன்னெடுப்புகள்...
1. உணவு பதனிடும் தொழிலில் 100% அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்திய தொழில் முனைவோர், வெளிநாட்டு தொழில் நுட்பங்களை எளிதாக பெற முடியும்.
2. "இந்தியாவில் தயாரிப்போம்" திட்டத்தின் கீழ், உணவு பதனிடும் துறையும் 25 முக்கிய துறைகளில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தானியங்கி முறையில் இத்துறையில் 100% அந்நிய முதலீடுகள் விரைவாக அனுமதிக்கப்படுகின்றன.
மத்திய அரசின் சலுகைகள் மற்றும் முன்னெடுப்புகள்...
1. பிரதம மந்திரியின் கிசான் சம்பாத யோஜனா:
விவசாய நிலங்களுக்கு அருகிலேயே தொழில் முனைவோர் உணவு பதனிடும் தொழிலகங்களை நிறுவ இத்திட்டம் ஊக்கம் அளிக்கிறது.
குளிரூட்டு நிலையங்கள், சிறப்பு பொதியாக்க தொழிலகங்கள், சேமிப்பு கிடங்குகள், பதன சேமிப்பகங்கள் போன்றவை உருவாக்க அரசின் மான்ய வசதிகள்
தகுதியுள்ள திட்டங்களுக்கு, திட்ட மதிப்பீட்டில் பெரும்பாலான மாநிலங்களில் 35% மானியமும், வடகிழக்கு மற்றும் இமய மலை சார்ந்த மாநிலங்களில் 50% மானியமும் வழங்கப்படுகிறது.
விவசாய வசதி கட்டமைப்புகள் இத்திட்டத்தின் கீழ், தொழில் முனைவோர், முதலீட்டாளர், விவசாயிகள், விவசாய சங்கங்கள், விவசாய கூட்டுறவு சங்கங்கள் ஆகியவை பயன்பெறும் வண்ணம் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
2. பெரும் உணவுப் பூங்காக்கள் அமைத்தல்:
பெரிய உணவுப்பூங்கா திட்டம் விளைபொருட்கள் சேமிப்பு மற்றும் பதனிடலுக்கு தேவையான ஒருங்கிணைந்த கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதாகும். மேலும், உணவு பதனிடல் துறையில் உள்ள பலருக்கும் இது மேலும் மதிப்பு கூட்டு வசதிகளை அளிக்கும்.
இத்திட்டத்தின் கீழ், மத்திய அரசு பூங்காவிற்கு ரூபாய் 50 கோடி வரை மான்ய உதவி அளிக்கும்.
பெரும்பாலான உணவுப்பூங்காக்கள், கீழ் கண்ட வசதிகளை கொண்டுள்ளன....
நவீன டெட்ரா பொதியிடும் வசதிகள்
உணவு சோதனைக்கூடங்கள்
நறுமண பொருட்கள் மற்றும் விவசாய விளை பொருட்கள் உலர்த்தும் வசதிகள்
குளிரூட்டும் நிலையங்கள்
சேமிப்பு கிடங்குகள்
பொதியிடல் மற்றும் அச்சிடும் வசதிகள்
இவ்வாறு, உணவு பூங்காக்கள் முதலீட்டாளர்களுக்கு நிதிச்சலுகைகள், பல்வேறு பதனிடும் வசதிகள், மற்றும் வேலை வாய்ப்பு மற்ற சேவைகளை சிறப்பாக அளிக்கின்றன.
3. பசுமை செயலாக்கம்:
2018-19 மத்திய நிதி நிலை அறிக்கையில், இத்திட்டத்தினை மத்திய அரசு அறிவித்தது. தக்காளி, உருளை, வெங்காயம் ஆகிய பயிர்களுக்கான ஒருங்கிணைந்த கட்டமைப்பு மற்றும் மதிப்பு கூட்டு வசதிகளை பெருக்கும் வண்ணம் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அறுவடைக்கு பிந்தைய பதனிடும் வசதிகளுக்கு, ரூபாய் 50 கோடி வரை திட்ட மதிப்பீட்டில் மான்யம் அளிக்கும் வண்ணம் இத்திட்டம் அமைந்துள்ளது.
4. சிறு உணவு பதனிடும் தொழில்களுக்கான பிரதம மந்திரியின் திட்டம்:
இத்திட்டம் உணவு பதனிடும் துறையில் துவங்கப்படும் சிறு தொழில்களுக்கானது.
அடிப்படை நிலையில், விவசாயிகளோடு நேரடி தொடர்பு கொண்டு இயங்கும் ...மிளகாய் வற்றல், நறுமண பொருள்கள் பொதியிடுதல், ஊறுகாய், அப்பளம் தயாரிப்பு போன்ற தொழில்கள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறும்.
இதன் மூலம், தொழில் முனைவோர் திட்ட மதிப்பீட்டில் 35% மான்யம் என்ற முறையில், ரூபாய் 10 லட்சம் வரை நிதி மான்ய உதவி பெறலாம்.
5. உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம் (PLI )
PLI திட்டமானது, உணவு பதனிடும் துறைக்கு, மத்திய அமைச்சரவையால் 31.3.2021 அன்று, 2021-22 முதல் 2026-27 வரை செயல்படும் வகையில், ரூபாய் 10,900 கோடி நிதி ஒதுக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
உடனடி உணவுகள், உடனடியாக சமைக்கும் உணவுகள், கடல் சார் உணவுகள், பழங்கள், காய்கறிகள், பாலாடைக்கட்டி, புதுமையான மற்றும் இயற்கை உணவுகள், கோழி, முட்டை மற்றும் இறைச்சி ஆகியவை இத்திட்டத்தின் கீழ் தகுதியுடைய பொருட்களாகும்.
இத்திட்டம், இந்தியாவில் குறிப்பிட்ட அளவு உணவு பொருள் விற்பனையை எட்டும், இந்திய கம்பெனிகளுக்கு மற்றும் இந்தியாவில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் அவற்றின் துணை நிறுவனங்களுக்கு பொருந்தும்.
இந்திய விளைபொருட்களை உலகெங்கும் பிரபலமாக்கி, இந்திய உணவு பொருட்களை உலக சந்தையில் வெற்றிகரமாக சந்தைப்படுத்தவும், விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரவும், விளைபொருட்களுக்கு நியாயமான நல்ல விலை கிடைக்கவும், விவசாயம் தாண்டிய வேலை வாய்ப்புகளை பெருக்கவும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் இதுவரை 165 முதலீட்டாளர்கள் பதிவு செய்யப்பட்டு அவர்களின் விண்ணப்பங்கள் பெறும் நிலையில் உள்ளனர்.
மொத்த ஒதுக்கீட்டில் எந்த கம்பெனியும் 25%க்கு மேல் பெற இயலாது மேலும் தகுதி பெறும் எந்த கம்பெனியும் 5%க்கு குறையாமல் திட்ட ஒதுக்கீட்டிலிருந்து பயன் பெறும்.
முடிவுரை:
மிகச் சிறப்பான கட்டமைப்பு வசதிகள், பெருமளவு கிடைக்கும் அடிப்படை மூலாதார விளைபொருள்கள், அரசின் அனுகூலமான நிலைப்பாடுகள், எளிமையான நடைமுறைகள், ஆகியவற்றால், தமிழகத்தில் உணவு பதப்படுத்தும் தொழில்களை துவங்குவதற்கு மிகவும் அனுகூலமான சூழ்நிலை நிலவுகிறது. எனவே, திறமை, தகுதி வாய்ந்த தமிழக இளைஞர்கள் இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி தமிழகத்தில் உணவு பதனிடும் தொழில்களை துவங்க வரவேற்கப்படுகிறார்கள். மேற்படி தொழில்கள் தொழில் நுட்ப அடிப்படையிலும், நிதி ஆதாரங்கள் அடிப்படையிலும், தமிழ்நாட்டில் வலுப்பெற்று இயங்க, கீழ்க்காணும் முக்கிய காரணிகள் அமைந்துள்ளன:
1. மத்திய அரசு உணவு பதனிடும் துறையில் 100% அந்நிய முதலீட்டை அனுமதித்துள்ளது. மேலும், விவசாயிகளின் விளைபொருட்கள் வீணாகாமல், பல்நோக்கு குளிரூட்டும் நிலையங்கள் கட்ட அனுமதிகளை அளித்துள்ளது.
2. 100% அந்நிய முதலீட்டின் மூலம், மத்திய அரசு அந்நிய முதலீட்டை வரவேற்று, "இந்திய தயாரிப்பு" பொருட்களை மட்டுமே விற்க அனுமதி அளித்துள்ளது.
3. இது நுகர்வோருக்கு தரத்தில் சிறந்த பண்ணை வாசல் பொருட்களை பெறவும், மேலும் இந்திய பொருளாதாரம் சிறப்பாக வலுப்பெறவும் வழி வகுக்கும்.
4. உணவு பதனிடுதல் துறை இந்தியாவில் அதிவேகமாக வளர்ந்து வரும் துறையாகும். இத்துறையின் ஏற்றுமதி வாய்ப்புகள் 50 முதல் 60% வளர பிரகாசமான வாய்ப்புகள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
5. NABARD, MOFPI போன்ற பல்வேறு அமைப்புகளின் மூலம் இந்திய அரசு உணவு பதனிடும் துறைக்கு நிதி உதவிகளை அளிக்கும் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
6. தொழிலகம் அமையவிருக்கும் இடத்தை பொறுத்து, 45% வரை திட்ட முதலீட்டில் மானியம் பெற நல்ல வாய்ப்பு உள்ளது.
7. தயாரிக்கப்படும் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும் நிபந்தனைக்குட்பட்டு, சுங்க வரியின்றி வெளி நாட்டிலிருந்து இயந்திரங்களை இறக்குமதி செய்ய இயலும்.
8. மேலும், இத்துறை முன்னுரிமை துறை (PRIORITY SECTOR )என்பதால், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெரும் வசதிகள் உள்ளன.
G V மணிமாறன்
முன்னாள் வங்கியாளர்
சென்னை 06 டிசம்பர் 2021
Comments
Post a Comment