கள்ளக்குறிச்சி அருகே மீண்டும் நிஜ ஜெய்பீம்? -
கள்ளக்குறிச்சி அருகே மீண்டும் நிஜ ஜெய்பீம்? - முதல்வர் தலையிட ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சி கோரிக்கை
அண்மையில் வெளியான ஜெய்பீம் படத்தில் காட்டப்படுவதுபோன்ற காவல் துறை சித்திரவதை கள்ளக்குறிச்சி அருகே அரங்கேறியிருப்பதாக குறவன் சமூக மக்கள் தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்து RDOவிசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சி சார்பாக வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.
கள்ளக்குறிச்சி அருகே குறவன் சமூகத்தைச் சேர்ந்த 5 பேர் கடந்த 14-ந் தேதி போலீசாரால் அடித்து உதைத்து விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இவர்களில் சக்திவேல் என்பவரின் கர்ப்பிணி மனைவி, தன்னை கடுமையாக தாக்கிவிட்டு சக்திவேலை இழுத்துச் சென்றதாக குற்றம் சாட்டியிருந்தார்.
அவர்கள் 5 பேரையும் கண்களைக்கட்டி காட்டுக்குள் இழுத்துச்சென்று, 3 நாட்களாக போலீசார் தொடர் சித்திரவதை செய்ததாக மனித உரிமை பாதுகாப்பு அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. இந்த தகவல் சமூக ஊடகங்களில் பரவியபின்னரே அந்த 5 பேரில் 2 பேர் விடுவிக்கப்பட்டதாகவும், மற்ற 3 பேர் மீது பொய் வழக்குகள் சுமத்தப்பட்டு அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டதாகவும் இந்த அமைப்புகள் தெரிவிக்கின்றன.
ஜெய்பீம் திரைப்படத்தில் கர்ப்பிணி செங்கேணி என்ற கதாபாத்திரம், போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்ட கணவர் ராஜாக்கண்ணு என்ன ஆனார் என தெரியாமல், போலீசாரின் துன்புறுத்தலுக்குள்ளானதைப்போல் இந்த நிஜ சம்பவங்கள் அமைந்திருந்ததால், கள்ளக்குறிச்சி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், 13 கொள்ளை வழக்குகள் தொடர்பாகவே 5 பேரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதாக, காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 3 பேரின் கைரேகைகள் கொள்ளை சம்பவங்களில் எடுக்கப்பட்ட கைரேகைகளுடன் ஒத்துப் போவதால், இந்த 3 பேர் மட்டும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும்,. எஞ்சிய 2 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மூவர் மீதும் மொத்தம் 13 கொள்ளை வழக்குகள் அவசரமாக போடப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கன்றனர்.. இவர்களில் இருவர் கள்ளக்குறிச்சி கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், போலீஸ் தாக்குதலில் படுகாயம் அடைந்த சக்திவேல் என்பவர் உயிருக்கு ஆபத்தான சூழலில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை அவசரமாக முடிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் அரசு தரப்பில் கொடுக்கப்படுவதால், ஆதரவற்ற குறவன் போன்ற விளிம்புநிலை சமூக மக்களை போலீசார் சட்டவிரோதமாக இழுத்துச்சென்று கொடுமைப்படுத்தி, கட்டாய வாக்குமூலங்களை வாங்கி, சிறையில் தள்ளி, நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை அவசரமாக முடித்து வைக்கிறார்கள் என்று, இந்த மக்களுக்கு ஆதரவாக குரல்கொடுக்கும் அமைப்புகள் தெரிவிக்கின்றன. ஜெய் பீம் படத்தின் கதைக் களமும் இதுதான்.
கள்ளக்குறிச்சி பகுதி குறவன் சமூகத்தினர் 5 பேரும் சட்டவிரோதமாகவும், ஈவிரக்கமற்ற முறையிலும் துன்புறுத்தப்பட்டதாகவும், இவர்களில் 3 பேர் பொய் வழக்குகள் போடப்பட்டு அநியாயமாக தண்டிக்கப்பட்டிருப்பதாகவும், ஒருவர் போலீஸ் தாக்குதலில் படுகாயம் அடைந்திருப்பதாகவும், அந்த சமூகத்தினர் கூறும் புகார் மிகுந்த வேதனை தருகிறது.
இந்த புகாரின் உண்மைத் தன்மை குறித்து பாரபட்சமின்றி விசாரிக்க. RDO விசாரணைக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சி சார்பாக வேண்டுகோள் விடுக்கிறோம். விளிம்புநிலை சமூக மக்கள் மீது பொய் வழக்குகள் போட்டு, நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை அவசரமாக முடிக்கும் காவல்துறையின் தவறான அணுகுமுறைக்கு நிரந்தர முடிவு கட்ட வேண்டும் என்றும், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சி சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
மணிமாறன் G V
தேசிய பொதுச்செயலாளர்
இராஸ்டிரிய லோக் ஜன்சக்தி
20 11 2021
Comments
Post a Comment